• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Feb 24, 2024

நற்றிணைப்பாடல் 325:

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று – இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ? – பெரும! – தவிர்க நும் செலவே.

பாடியவர்: மதுரைக் காருலவியங் கூத்தனார் திணை: பாலை

பொருள் :

பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி; விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; கடந்து நீயிர் செல்லத்தகுமோ? (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!