• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Nov 20, 2023

நற்றிணைப் பாடல் 304:

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.

பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்
திணை : குறிஞ்சி

பொருள் :
நீண்டு வளைந்திருக்கும் கதிரிலுள்ள தினையை இனத்துடன் சேர்ந்து உண்டுகொண்டு கிளிகள் அதிரும் காற்றில் யாழிலிருந்து எழும் ஒலி போலப் பேசி ஒலி எழுப்பும் குளிர்ந்த மலைநாட்டின் தலைவன் அவன். அவன் என்னிடம் உறவு கொண்டால் என் மேனியில் அழகு சேர்கிறது. அவன் என்னை விட்டுப் பிரிந்தால், பொன்னும் மணியும் சேர்ந்த அணிகலன் போலத் திகழும் என் மேனி அழகு கெட்டுப் பசலை நிறம் பாய்ந்துவிடுகிறது. அதனால், அவன் மார்பானது, அசுணத்தைக் கொல்பவர் யாழை மீட்டி அது மயங்கும்போது அதனைக் கொன்றுவிடுவது போல இன்பமும் துன்பமும் தருவதாக அவன் உறவு உள்ளது. தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.