• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 28, 2023

நற்றிணைப் பாடல் 284:

”புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்”, நெஞ்சம்,
”செல்லல் தீர்கம்; செல்வாம்” என்னும்:
”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
”சிறிது நனி விரையல்” என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

பாடியவர்: தேய்புரிப் பழங்கயிற்றினார்
திணை: பாலை

பொருள் :
பொருள் தேடச் செல்லும் தலைவனின் அறிவு இடைவழியில் அங்கும் இங்கும் பாய்கிறது. பொருள் தேடச் செல்லலாமா, காதலியிடம் திரும்பிவிடலாமா, என்று ஆட்டுகிறது. ஏ! உடம்பே இப்படியே நினைத்துக்கொண்டிருந்தால், யானையைக் கட்டி வைத்திருக்கும் புரி தேய்ந்துபோன கயிறு போல நீ உயிர் அறுந்து மாண்டுபோவாய் என்கிறான், தலைவன்.
அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டிவைத்திருப்பவள். என் நெஞ்சு அல்லாடுகிறது.
நெஞ்சே! நம் வறுமை தீரப் பொருள் தேடச் செல்லலாம், என்னும் எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது. செயல் முடியாவிட்டால் என்ன, திரும்பிவிடலாம், என்னும் எண்ணம் மற்றொருபுறம் இழுக்கிறது. பொருள் ஈட்டாமல் திரும்புதல் கேளிக்கூத்து, என்னும் எண்ணம் இன்னொருபுறம். இப்படி உறுதி இல்லாமல் என் அறிவு ஊசலாடுகிறது. மிகவும் விரைந்து செயல்படாதே சிறிது காலம் தாழ்த்து என்கிறது அது. இதற்கு இடையில் என் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக்கொண்டே இருக்கிறது. யானையைக் கட்டிவைத்திருக்கும் புரி தேய்த்துபோன கயிறு போல என் உயிர் அறுந்து உடல் மாய்ந்துவிடும் போல இருக்கிறது.