• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 23, 2023

நற்றிணைப் பாடல் 279:

வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ – ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம் பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

பாடியவர் : கயமனார்
திணை : பாலை

பொருள் :

தலைவனைச் சார்ந்து மணமுடிக்கும் பொழுது காலிலணிந்திருந்த செறிந்த வாயினையுடைய சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் விழாச்சிறப்பை யான் கண்டு மகிழாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த அழகிய கலன் அணிந்த என் புதல்வியின் அடிகள்; வேம்பின் ஒள்ளிய பழத்தைத் தின்னுதல் வெறுத்து இருப்பையின் தேன்போலும் பால்வற்றிய இனிய பழத்தை விரும்பி; வைகிய பனியிலே உழந்த வெளவால் கிளைகள்தோறும் செல்லுதலால் அவற்றின்மேல் நெய் தோயந்த திரிசுடர் விழுதல் போலத் தண்ணிய பனித்துளிகள் மிகவிழ; விடியற் காலையிலே சுரத்திற் சென்று வருந்திய வாள்போலும் நிறமுற்ற வரிபொருந்திய ஆண்புலியொடு போர் செய்த யானையின்; புண்ணையுடைய கால்போலப் பொளிந்தெடுத்துத் தின்ன வேண்டிப் பசிமிக்க பிடியானை உதைத்து மேற்பட்டையைப் பெயர்த்த ஓமையின்; சிவந்த அடிமரம்; ஞாயிறெழுந்து வெயில் வீசும்போது விளங்கித் தோன்றா நிற்கும் பாலையின் அருஞ்சுரநெறியிலே சென்று; வருந்துகின்றனவோ? ஓ ஐயோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *