• Thu. May 9th, 2024

நற்றிணைப் பாடல் 261:

அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே.

பாடியவர்: சேந்தன் பூதனார்

திணை: குறிஞ்சி

பொருள்:

 தோழி! அவருக்கு அருளே இல்லை. நள்ளிரவில் கொடிய வழியில் எனக்காக வருகிறார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் என் நிலைமை என்ன ஆகும்? தலைவி தோழியிடம் இப்படிக் கூறுகிறாள். வானம் மின்னுகிறது. இருள் மண்டிக் கிடக்கிறது. 

வானில் இடி முழங்குகிறது. காய்ந்து கிடந்த காட்டை மறைத்துக்கொண்டு நீர்க் கருவைத் தாங்கிச் செல்லும் மேகங்கள் உயர்ந்த மலைக் குன்றுகளைத் தழுவிக்கொண்டு மாசு மறுவற்ற நீரை மழையாகப் பொழிகின்றது. நள்ளிரவு வேளை இது. பெருஞ்சினம் கொண்ட மலைப்பாம்பு சோறு இல்லாமல் வயிரம் பாய்ந்த மரத்தைப் பற்றிக்கொண்டு, யானையை இரையாக்கிக்கொள்ள வளைத்து இறுக்கும் வழி அது. எருவைப் பூவோடு சந்தனமும் மணக்கும் சிறிய மலைவழி அது. அதன் வழியே வருகிறாரே! அவர் அருள் இல்லாதவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *