• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 7, 2023

நற்றிணை: 245
நகையாகின்றே – தோழி! – ‘தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், தௌ தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?’ என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

பாடியவர் : அல்லங்கீரனார்
திணை: நெய்தல்

பொருள்:

தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தெளிந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தெளிந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்!