நற்றிணைப் பாடல் 244:
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது’ என உரைத்தல் ஒன்றோ
செய்யாய்: ஆதலின் கொடியை – தோழி!
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என் மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.
பாடியவர் : கூற்றங்குமரனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!