• Mon. May 6th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 5, 2023

நற்றிணைப் பாடல் 243:

தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு, அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!’ என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

பாடியவர் : காமக்கணிப் பசலையார்
திணை: பாலை

பொருள்:

தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தெளிந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; “அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!” என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தெளிவாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *