• Fri. May 10th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 7, 2023

நற்றிணைப் பாடல் 225:

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை, இரந்தோர் உளர்கொல் – தோழி! – திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

பாடியவர் : கபிலர்
திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! திருத்தமாகச் செய்த கலன் அணிந்த தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வனமுலையின் கணுள்ள இரேகையின் அழகு கெடும்படி பசந்து தோன்றிய துன்பந்தீருமாறு; முருகவேளையொத்த வலியொடு கடுஞ்சினம் மிகுத்துப் போர்செய்த யானையின் குருதி படிந்த வெளிய தந்தம் போல; வாழை அப்பொழுது ஈன்ற தாற்றின் கூர்மை பொருந்திய கொழுத்த முகை; மெல்லிய சாயலையுடைய மகளிரது கூந்தலை முடித்துப்போட்டாற் போன்ற அதன் பூவொடு அசையாநிற்கும்; பெரிய மலை நாடன்பாற் சென்று விரும்பின எமக்கு உதவாத அன்பற்ற அவனது மார்பை நம்மில் இரந்து கேட்டவர் உளரோ? அவனே வந்து தலையளி செய்து இப்பொழுது கைவிட்டொழிந்தனன் கண்டாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *