மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (48). இவர் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மனோஜ் பாரதி
கடந்த 2023-ம் ஆண்டு மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனரானார். மேலும் ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கடைசியாக ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் தொடரில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் அவர் காலமானார். இந்தச் சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் மனோஜ் பாரதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராம், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் நேரடியாக பாரதிராஜா வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர்..
இந்த நிலையில் மனோஜ் பாரதி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய நண்பன் பாரதியின் மகன் மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன். இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது; ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என காலம் விதித்திருக்கிறது; மனோஜின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என உருக்கமாக கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
இந்த நிலையில் காலமான மனோஜ் பாரதியின் உடல், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு இறுதிச்சடங்கிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மனோஜின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.




