• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 28

Byவிஷா

Feb 17, 2025

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

பாடியவர்: ஒளவையார்
திணை: பாலை

பாடலின் பின்னணி:
தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி வருந்துகிறாள். தலைவியின் வருத்தத்தை அறிந்த தோழி அவளைக் காண வருகிறாள். தலைவி தான் படும் துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
சுழன்று வருகின்ற தென்றல் காற்று எனக்குக் காம நோயைத் தந்து என்னை வருத்துகிறது. எனக்கு வருத்தத்தை தரும் என்னுடைய நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து நான் முட்டிக் கொள்வேனா? அவர்களைத் தாக்குவேனா? அல்லது, ஏதாவது ஒரு போலிக்காரணத்தை முன்வைத்து, ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா? என்ன செய்வது என்பதை அறியேன்.