தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.
பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
பாடலின் பின்னணி:
மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழும் தலைவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன் விருப்பத்தை மனைவியிடம் தெரிவிக்க ஒருதூதுவனை அனுப்புகிறான். அந்தத் தூதுவன் தலைவனின் மனைவியின் தோழியைச் சந்திக்கிறான். ”தலைவனோடு கூடி இன்பமாக இல்லாவிட்டாலும், அவனுடைய நட்பு மட்டுமே தலைவிக்குப் போதுமானதாக இருக்கிறது. அவள் தலைவனின் பிரிவால் வருந்தாமல் இருக்கிறாள்.” என்று தோழி தூதுவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில், ஏறிச் செலுத்தி இன்பமடையாவிட்டாலும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, தலைவனோடு கூடி இன்பமடையாவிட்டாலும், நல்ல தேர்களையும், பொய்கையையுமுடைய மருதநிலத் தலைவனது நட்பினால் இன்பமடைந்தோம். அதனால். தலைவியின் வளையல்கள் கழலாமல் உள்ளன.
குறுந்தொகைப் பாடல் 61
