• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 60

Byவிஷா

May 3, 2025

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
பாடியவர்: பரணர்.

பாடலின் பின்னணி:
தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். அதுவே எனக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
குறுகிய அடியையுடைய கூதளஞ்செடி அசைந்து ஆடும் உயர்ந்த மலையிலுள்ள, பெரிய தேனடையைக் கண்ட முடவன், காலில்லாததால் உட்கார்ந்துகொண்டே, தன் உள்ளங்கையை ஒரு சிறிய குடை (பாத்திரம்) போல் குவித்து, அம்மலையின் கீழே இருந்தபடியே, அந்தத் தேனடையைப் பலமுறை சுட்டிக்காட்டித் தன் கையை நக்கி இன்புற்றதைப் போல, தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பலமுறை பார்ப்பதே என் உள்ளத்திற்கு இனிமையானதாக இருக்கிறது.