• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 57

Byவிஷா

Apr 21, 2025

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.

பாடலின் பின்னணி:
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன் மகளின் களவொழுக்கத்தை அறிந்த தாய், தலைவியைக் கடுமையான காவலில் வைத்தாள். தலைவனைக் காணமுடியாததால், தலைவி மிகவும் வருந்துகிறாள். பிரிவினால் வாடும் தலைவிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகம் போல் தோன்றுகிறது. இந்தப் பிரிவினால் உண்டாகும் வருத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஒரேவழி, தலைவனும் அவளும் ஒருங்கே இறப்பதுதான் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில் நானும் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம். நீரில் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகள், பூ இடையே வந்ததால் சிறிது நேரம் பிரிய நேரிடும் பொழுது, அந்தப்பிரிவு ஓராண்டுகாலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப் போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி, பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின் உயிரும் ஒருங்கே போகட்டும்.