• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 51

Byவிஷா

Apr 4, 2025

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
பாடியவர்: குன்றியனார்.

பாடலின் பின்னணி:
தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு ஏதாவது தடை வருமோ என்று தலைவி கவலைப்படுகிறாள். “உன் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனைப் பிடித்திருக்கிறது. உன்னை அவனுக்குத்தான் உன் தந்தை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார். ஊரில் அதைப் பற்றித்தான் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
வளைந்த முட்களை உடைய கழிமுள்ளியின் மிகுந்த குளிர்ச்சியான கரிய மலர்கள், நூலறுந்ததால் உதிர்ந்த முத்துக்களைப் போல, காற்றில் சிதறி, நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனை மிகவும் பிடித்திருக்கிறது. உன் தந்தையும் உன்னை அவனுக்கே திருமணம் செய்துகொடுக்க விரும்புகிறார். உங்கள் காதலைப் பற்றி அறிந்த ஊர்மக்கள் உன்னையும் உன் தலைவனையும் சேர்த்தே பேசுகிறார்கள்.