காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
பாடியவர்: வெள்ளிவீதியார்.
பாடலின் பின்னணி:
தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். தலைவியின் செவிலித் தாய் ( தோழியின் தாய்) அவர்களைத் தேடி அலைகிறாள். ”நான் தேடிய இடங்களிலும் வந்த வழியிலும் பலரைப் பார்த்தேன், ஆனால் தலைவியைக் காணவில்லையே” என்று செவிலித்தாய் வருந்துகிறாள்.
பாடலின் பொருள்:
என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன் எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன் நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற, (என்மகள் போன்ற) பெண்ணைக் காணவில்லை.