யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
பாடியவர்: செம்புலப் பெயனீரார்
பாடலின் பின்னணி:
ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும் சந்தித்துக் கருத்தொருமித்துப் பழகினார்கள். தங்களுடைய காதல் தொடருமா அல்லது தன் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று காதலி கவலைப்படுகிறாள். ”எவ்விதமான உறவும் இல்லாத நாம் நெருங்கிப் பழகுகிறோம். நம்முடைய நெஞ்சங்கள் ஒருமித்தன. நாம் பிரிய மாட்டோம்.” என்று உறுதி கூறித் தலைவன் அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
பாடலின் பொருள்:
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும், ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? ஆனால் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன. நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டோம்.