நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார்
திணை: மருதம்
பாடலின் பின்னணி:
தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள். ”என் தலைவன் பிரிந்து சென்றபொழுது அழாமல், அவன் பிரிவிற்கு உடன்பாடாக இருந்த என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுகின்றன.” என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
தோழி, தலைவர் பிரிந்த நாளில் உடன்பட்டு, கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி, கார்காலத்து மழை பெய்த பிறகு, மேகங்களில் எஞ்சியிருக்கும் துளிகளுடன் குளிர்ச்சியுடைய வாடைக் காற்று வீசும் குளிர்காலத்திலும் பிரிந்திருக்கும் தலைவரை நினைத்து அழுவதால் என்னுடைய கண்கள், நிச்சயமாக நாணம் இல்லாதவை.