கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.
பாடியவர்: வெள்ளிவீதியார்
திணை: பாலை
பாடலின் பின்னணி:
தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு தனக்கும் பயனில்லாமல் தன் தலைவனுக்கும் உதவாமல் வீணாகிறது என்று தலைவி தன் தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல, தேமல் பொருந்திய என் உடலின் கருமை நிறத்தோடு கூடிய அழகை, எனக்கும் பயனளிக்காமல் என் தலைவனுக்கு இன்பம் பயக்காமல் பசலை நோய் உண்ண விரும்புகிறது.