அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே, தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்
வரையாடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக்கொடியோனையே.
பாடியவர்: கொல்லன் அழிசியார்
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி:
அரும்புகள் முற்றவும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகுதியில்லாதவன் போல, கட்டுவிச்சி, “இது கடவுளால் வந்தது” என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண்களால் கண்டதை “நான் காணவில்லை” என்று பொய் சொல்லாது, இனிய மாவின் கனியை உண்ணும் முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கு. அந்தக் கொடியவனாகிய தலைவனை அது அறியும்.
பாடலின் பொருள்:
அரும்பு அற மலர்ந்த – அரும்புகள் முற்றவும் மலர்ந்த, கருங்கால் வேங்கை – கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய அடியையுடைய வேங்கை மரம், மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை – மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், பூக்கொய் மகளிரின் தோன்று நாடன் – மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகாஅன் போல – தகுதியில்லாதவன் போல, தான் – கட்டுவிச்சி, தீது மொழியினும் – கடவுளால் வந்தது என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே – தன் கண்களால் கண்டதை நான் காணவில்லை என்று பொய் சொல்லாது, தேன் கொக்கு அருந்தும் – இனிய மாவின் கனியை உண்ணும், முள் எயிற்றுத் துவர் வாய் – முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, வரையாடு வன் பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும் – மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அறியும், அக்கொடியோனையே – அந்தக் கொடியவனாகிய தலைவனை




