வேங்கைவயலைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த, வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்தினர். அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.