ஒரு பிச்சைக்காரன் தான் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம். பிச்சைக்காரரான நாயகன் கவின், அரண்மனை ஒன்றின் உள்ளே சென்று பார்க்க ஆசைப்பட்டு அதனுள் நுழைகிறார். அப்போது அவர் எதிர்பார்க்காத வகையில், அந்த அரண்மனையின் வாரிசுகளில் ஒருவராக நடிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அதன்படி, நடிப்பவர் அங்கு பலவித பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு, உயிருக்கே ஆபத்தான நிலையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
ஆசை, எதிர்பார்ப்பு, கவலை இல்லாத வாழ்க்கை, நக்கலான உடல்மொழி என்று பிச்சைக்காரராக வலம் வரும் கவின், தனது நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. ரெடின் கிங்ஸ்லியின் காமெடியும் எடுபடவில்லை. ஜென் மார்டினின் இசை, சுஜித் சாரங ஒளிப்பதிவு, ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
பிச்சைக்காரரின் வாழ்க்கைப் பின்னணியை கொண்டு அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் வடிவமைத்த கதைக்கருவில் இருந்த சுவாரஸ்யம் திரைக்கதையில் இல்லை.
சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையா? அல்லது பிளாக் காமெடி வகையா? என்று தெரியாமல் குழப்பத்தோடு காட்சிகளை நகர்த்திச் செல்லும் இயக்குனர் இறுதிக் காட்சியில் நாயகனை குத்தி குதறுவது போல், படம் பார்க்கும் பார்வையாளர்களையும் படம் முழுவதும் படுத்தி எடுக்கிறார்.
மொத்தத்தில் ‘ப்ளடி பெக்கர்’ திட்ட வேண்டியவர் தான்.