தாம்பரம் அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் அமைந்துள்ள 60 ஆண்டு பழமையான இந்திய சுவிசேஷ திருச்சபை கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக, அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி 2023ஆம் ஆண்டு விஜயா என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக திருச்சபை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. எனினும் தலையிட முடியாது என கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தபின்னர், இன்று (05.12.2025) வேலுமணி மற்றும் லஷ்மிநாராயணன் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, இடிப்பு உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில், மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் இடிப்பு பணிக்கான தயார் நிலையில் உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி துணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், திருச்சபை உறுப்பினர்கள், அப்பகுதி மக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் என சுமார் 1000 பேர் “திருச்சபை இடிக்க கூடாது” என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.




