• Sun. May 5th, 2024

இடிந்து விழும் நிலையில் செயல்படும் ஹார்விபட்டி கிளை நூலகம்… அச்சத்தில் நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள்..,

ByKalamegam Viswanathan

Feb 9, 2024

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பேரூராட்சியாக இருந்த ஹார்விப்பட்டி. திருநகர். பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 குடியிருப்புகள் இருந்த காலகட்டத்தில் 150 வாசகர்கள் மற்றும் 10-ஆயிரம் புத்தகத்துடன் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் கிளை நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

ஹார்விப்பட்டி பகுதியில் இயங்கக்கூடிய கிளை நூலகம் பேரூராட்சியாக இருந்த காலகட்டத்தில் திறக்கப்பட்டு தற்போது இப்பகுதி மதுரை மாநகராட்சியின் 97வது வார்டாக மாற்றப்பட்டும் இயங்கி வருகிறது. இந்நூலகம் திறக்கப்பட்டு 35 ஆண்டுகளாகியும், இதுவரை புனரமைக்கப்படாததால் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரைகள் ஆகியவை சிதலமடைந்து அவ்வப்போது மேற்கூரையின் சுண்ணாம்பு பூசுகள் இடிந்து நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் மீது விழுவதால் நூலகத்திற்கு வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

தொடர்ந்து பேரூராட்சியாக இருந்தபோது 150 வாசகர்களுடன் தொடங்கப்பட்ட இந்நூலகம் தற்போது 3500 வாசகர்களும், 85 புரவலர்கள், 2 பெரும் புரவலர்களும், சுமார் 49,500 புத்தகங்களுடன் உள்ள ஹார்விப்பட்டி கிளை நூலகம் காலை 8.00 மணிக்கு தொடங்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை இயங்கி வருகிறது. அதே போல மாலை 4.00 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 8.00 மணிவரை இயங்கி வருகிறது. இந்த நூலகத்தைச் சுற்றி திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் அடிக்கடி காலை, மாலை என நூலகத்தை தங்களது கல்விக்காக பயன்படுத்துகின்றனர்.

இவ்வளவு பெருமைகளை கொண்ட ஹார்விப்பட்டி கிளை நூலகம் முற்றிலும் சிதலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயம் உள்ளதாகவும், மழைக்காலங்களில் சிதலமடைந்து காணப்படும் மேற்கூரையில் தண்ணீர் வழிந்து புத்தகங்கள் சேதமடை சூழலும் உருவாகியுள்ளது. தொடர்ந்து நூலகத்தின் மேல் கூரையில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளும் அறுந்து விழுந்து தொங்கும் நிலையில் இந்நூலகம் காணப்படுவதால் வாசகர்கள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் அச்சத்துடனே வந்து செல்வதாகவும், புதிய கட்டிடம் அல்லது ஏற்கனவே உள்ள கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *