ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தர வேண்டிய நிதியை முடக்கிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அப்பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
கூட்டாட்சி நிதியில் 2.2 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரபலமான ஐவி லீக் கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகம் ஃபெடரல் நிதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, தங்களை அரசியல் அடிப்படையில் உடன்படச் செய்வதற்கு முயலுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இது அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஹார்வர்ட் தெரிவித்துள்ளது.
மாசச்சூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், யூத-விரோதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் அரசியல் மேற்பார்வையை அமல்படுத்துவது என்ற போலிக்காரணத்தின் கீழ் கல்வி சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அரசு நிதி நிலுவையில் வைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும். அரசு மானியத்திற்கு இணைத்துத் தரப்படும் அரசியல் விதிமுறைகளை நிராகரிக்க வேண்டும். இந்த வழக்குக்கான சட்ட செலவுகளை அரசாங்கமே செலுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும். ஹார்வர்டில் கல்வி மற்றும் நிர்வாக முடிவுகள் மீது கட்டுப்பாடு ஏற்படுத்த, அரசாங்கம் நிதி வழங்குவதை தவிர்க்கும் ஒரு அழுத்த கருவியாக பயன்படுத்த முயற்சிக்கிறது,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் கூறுகையில், “நிதி உதவியை நிறுத்தியது சட்டவிரோதமானது. இது அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறிய செயல். எனவே, இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார். இந்த வழக்கை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மாசசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மற்ற பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
எந்த அரசாங்கமும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டும், யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும், எந்த துறையில் படிக்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்கக் கூடாது” என்று கூறினார். இந்த வழக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. மேலும், இது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.