நாகர்கோவிலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்.
தென் மாவட்டங்களில் பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தொடர்ந்து, பல ஆண்டுகளாக அரசியல் புள்ளிகள் மூலம் கேரளாவுக்கு கடத்தி வருகிறார்கள். ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை வளங்களை அழித்து கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள். ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திராவிட மாடல். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணுச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு கிள்ளியூரில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது. இயற்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. தாது மணலால் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணு கனிம சுரங்கம் அமைப்பதால் கிராமங்கள் பாதிக்கப்படும்.

கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் 2 இரண்டு அணு உலைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு 10 அணு உலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அணு உலைகளால் பல பாதிப்புகள் ஏற்படும். வெடித்தால் நான்கு மாவட்டம் அழிந்துவிடும். குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், பன்றிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. குமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் உள்ள 33 சோதனை சாவடிகளை கடந்து இதை கொட்டி வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை ஜெயில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது இந்திரா காந்தி தான். தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த போது அமைதியாக இருந்தது. தி.மு.க.வும், காங்கிரசும் தான் இதற்கு முக்கிய காரணம். பிரதமர் மோடி கட்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகம் தான் கஞ்சாவை சிறு தொழிலாக செய்வதில் முதன்மை பெற்று வருகிறது. கோவில், பள்ளிகளில் கூட சரளமாக கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. மூன்று தலைமுறையை மதுவால் அளித்த இந்த அரசு தற்பொழுது கஞ்சாவால் அளிக்க நினைக்கிறது. இதற்கு காவல்துறையும் உடனடியாக இருந்து வருகிறது. நெல்லையில் கோர்ட்டு முன் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். முதலமைச்சர் கையில் தான் சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து உள்ளது. ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் பல மாநிலங்களில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சருக்கு ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பயமாக உள்ளது. சென்னையை சுற்றி தான் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் தொழிற்சாலைக்கு எதிரானவர்கள் அல்ல. விளைநிலங்களை அழித்து தொழிற்சாலை வேண்டாம் என்று தான் சொல்கிறோம். தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். திருவண்ணாமலை கூட தொடங்கலாம்.
1-ம் வகுப்பு முதல் 18-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று மத்திய அரசு கூறியது தவறான அணுகுமுறை. எனவே அதை திரும்ப பெற வேண்டும். கூட்டணியில் இருந்தாலும் நீட் விவகார பிரச்சினை தொடர்பாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நல்லதை பாராட்டுவோம். தவறை எதிர்க்க தான் செய்வோம்.
சமூக நீதி மேல் கலைஞருக்கு புரிதல் இருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு அது இல்லை. மு.க.ஸ்டாலினை சுற்றி உள்ள அமைச்சர்கள் வியாபாரிகள் தான். 2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில் நாங்கள் கண்டிப்பாக இருப்போம். திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசுவது தவறான முன் உதாரணமாகும். கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.