உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜையை முன்னிட்டு, பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜை விழா நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு இன்று திமுக சார்பில் நகர, ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேமுதிக, பாரதிய பார்வட் ப்ளாக், தென்னிந்திய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் கட்சியினர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினர், கிராம பொதுமக்கள் ஊர்வலமாக வந்து தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அகில இந்திய பார்வட் ப்ளாக் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கதிரவன் தலைமையில் 117வது தேவர் குரு பூஜையை முன்னிட்டு 117 முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள் தேவர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.