• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வகுப்பை கட் அடிக்கும் மாணவர்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு

Byவிஷா

May 20, 2024

இனி மாணவர்கள் வகுப்பை கட் அடித்தால் அந்தத் தகவல் உடனுக்குடன் மாணவர்களின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி செல்லும் மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாதபடி அதிரடி நடவடிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் EMIS இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் சில நேரங்களில் சில மாணவர்களின் குறிப்பிட்ட சில விவரங்கள் விடுபட்டுப் போகின்றன. இதனால் தேர்வு நேரத்திலும், தேர்வுக்கு பிறகும் அந்த வகையான மாணவர்களை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை. மேலும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்தல், தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்விக்கு செல்கிறார்களா என அறிந்து கொள்ளவும் மொபைல் எண்கள் தேவையாக இருக்கிறது.
அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. அத்துடன் அவர்களிடம் இருந்து பெற்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு ஓடிபி எண்களையும் கேட்டு வருகிறது. அதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்து ஓடிபி எண்களை சொல்ல மறுக்கின்றனர். எனவே, ஓடிபி எண்கள் பெறுவது மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை பெற்றோருக்கு தெரிவிப்பதற்காகவே என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, தற்போது பெற்றோர் தாங்களாகவே முன்வந்து ஓடிபி எண்களை சொல்லி தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தால் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும் பள்ளிக் கல்வித்துறையும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கண்காணிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாணவர் பள்ளிக்கு வரவில்லை எனில் அந்த தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும், பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் செய்து விட்டு வெளியில் சென்று விட்டாலும் அந்த விவரங்களும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
முறைகேடாக பள்ளிகளில் நடந்து கொண்டாலும், போதைப் பொருள்கள் பயன்படுத்தினாலும் அதுகுறித்த தகவல்களும் உடனுக்குடன் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். இதற்காக பெற்றோர் எண்களை இணைத்து பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழுக்களும் உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் இணையும் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், பாடங்களை கற்கும் விதம் குறித்த தகவல்களும் அனுப்பி வைக்கப்படும். எந்தெந்த பாடங்களில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர், அதற்காக பெற்றோர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 35 லட்சம் பேர் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் கல்வி ஆண்டிலேயே இத்திட்டத்தை அமுல்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.