• Mon. Jul 1st, 2024

அரசு வழங்கும் இலவச சைக்கிள் தரம் இல்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Byவிஷா

Jun 29, 2024

தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலவச சைக்கிள் தரம் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
நீண்ட தொலைவில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவியருக்கு உதவும் விதமாக தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4,89,600 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.235.92 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் இந்த திட்டம் முடங்கியது. இந்த நிலையில் மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது..,
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை..? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே..? இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *