• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும் – டெல்லி அரசு

Byமதி

Nov 30, 2021

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை, அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது,
கனரக வாகனங்கள், லாரிகள் நுழைய தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை.

எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால் கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அறிவித்தார். அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7 வரை தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக, அரசு சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது.