கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு என்று செய்திகள் வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. கடந்த வாரம் சனிக்கிழமை (மார்ச் 29) ஒரு பவுன் ரூ.66,880 ஆக இருந்தது.
தொடர்ந்து இந்த வார தொடக்கம் முதல் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. திங்கள் கிழமை (மார்ச் 31) ரூ.67,600, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) ரூ.68,080 என்று புதிய உச்சங்களைத் தொட்ட தங்கம் விலை நேற்று (வியாழக்கிழமை) ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.8,400-க்கும், ஒரு பவுன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு
