• Fri. Apr 26th, 2024

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடங்குவதில் குளறுபடி..,
தேர்வர்கள் அதிருப்தி..!

Byவிஷா

Feb 25, 2023

தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில், சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த நவ. 8-ம் தேதி வெளியிட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் 55,071 பட்டதாரிகள் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (பிப்.25) நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சில மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை காயிதே மில்லத் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியில் தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை துரைப்பாக்கம், கடலூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தாமதம் ஏற்பட்ட இடங்களில் கூடுதல் நேரம் வழங்க டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *