கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதைக் கண்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் பாராட்டு தெரிவித்திருப்பதுடன், வரி ஏய்ப்பு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனர் அண்ணா சரவணன், நடிகர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..,
சமூக அக்கறையோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தாங்கள் செய்து வருகிற பல நல்ல காரியங்கள் பாராட்டுக்குரியவை என்றும், சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரை பாராட்டி, பரிசளித்து ஊக்கப்படுத்திய விதம், மற்ற மாணவர்களையும் நன்றாக படித்து உங்கள் கைகளால் பரிசு பெற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களின் மனதில் விதைத்திருக்கிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, தேர்தலில் வாக்களிக்க காசு வாங்கக் கூடாது என்ற வேண்டுகோளை வைத்த போது, ஒரு அரசியல் இயக்கத்தின் பொறுப்பாளர் என்கிற முறையில் பெருமைப்படுகிறேன்.
எதிர்கால வாக்காளர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் விஜய், உங்களை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தின் விநியோக உரிமை ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சத்துக்கு விற்பனையான நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் உண்மையை மறைத்து ரூபாய் நான்கு கோடிக்கு மட்டுமே விற்றதாக ஆவணங்கள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்துள்ளார். வருமானம் ஈட்டுபவர்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தான் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை அரசுகளால் செயல்படுத்த முடியும் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான். ஆகவே, சமூக அக்கறையோடு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் தாங்கள், தங்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, உரிய வரியை செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.