ஜென்டில்மேன் 2 படம் உறுதியாகி விட்டது. டைரக்டர், ஹீரோ யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்க போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
1993 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த பிளாக்பஸ்டர் படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், நம்பியார், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க போவதாக சமீபத்தில் கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார்.
ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. படம் பற்றி அறிவித்த குஞ்சுமோன், இசையமைப்பாளராக பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இருப்பார் என அறிவித்தார்.
இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இந்த படத்தில் ஹீரோயின் ரோலில் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறதாம். ஆனால் இதற்கு நயன்தாரா ஓகே சொல்லி விட்டாரா, இல்லையா என்பது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தேர்வும் நடந்து வருகிறதாம். விரைவில் படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.