• Thu. Apr 25th, 2024

சவுராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

மதுரை செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது
காந்தி நினைவு அருங்காட்சியகத்தின்காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர் தனது சிறப்புரையில் ” வன்முறை மூலம் கிடைக்கின்ற வெற்றி நிரந்தரமான வெற்றி ஆகாது.அஹிம்சை வழியில் போராடி பெறுகின்ற வெற்றியே நிரந்தரமான வெற்றியாகும். அகிம்சை என்பது அணுகுண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. இந்த அகிம்சை தத்துவத்தின் முக்கியத்துவத்தை தென்னாப்பிரிக்காவில் புலம் பெயர்ந்த இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் எடுத்துக் கூறியவர் மகாத்மா காந்தி. ஆகவே இவரது பிறந்த தினமான அக்டோபர் 2 உலக அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக அமைதிக்கு அகிம்சை சித்தாந்தம் மிகவும் அடிப்படையாக உள்ளது. மகாத்மா காந்தி ” குழந்தைகள் உண்மை பேச வேண்டும். அகிம்சையே கடைப்பிடிக்க வேண்டும். இவர்கள் முலம் தான் உலக அமைதி சாத்தியமாகும் “என்று குறிப்பிடுகிறார்.


இன்று சமுதாயத்தில் பல பிரச்சனைகள் இருப்பதை காண முடிகின்றன. இதற்கு அடிப்படை காரணம் மனிதர்களாகிய நாம் அகிம்சையை கடைப்பிடிக்க மறந்ததே ஆகும். ஒருவன் பிறருக்கு தீங்கு செய்கின்றபோது நாளைய துன்பத்துக்கான விதையை இன்று விதைக்கிறான்” என்று பகவத் கீதை கூறுகிறது. பக்குவமான மனிதன் என்பவன் யாரையும் குறை கூற மாட்டான், தீமை செய்ய மாட்டான், தீங்கு விளைவிக்க மாட்டான், வன்முறையில் ஈடுபட மாட்டான், தான் என்ற அகந்தையும் இருக்காது. இத்தகைய பண்புகள் காந்தியடிகளின் உணர்விலும் செயலிலும் கலந்து இருந்தன”.என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் என்.கே அழகர்சாமி அகிம்சையின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக் கூறி , இன்றைய நவீன உலகில் அமைதியை இழந்தோம் என்பது உண்மைதான். அமைதியை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது. இது மனதால் மட்டும் உணர முடியும். மனதால் மட்டும் சாத்தியமாகும் .இதற்கு ஒரே வழி அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார். செளராஷ்டிரா கல்லூரியின் காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் எஸ்.எம்.நந்தினி தனது அறிமுக உரையில் ” காந்தியடிகள் தனது வாழ்க்கையில் உண்மை மற்றும் அகிம்சையை மிகவும் சரியாக கடைபிடித்தவர். இதனால் இன்று உலக மக்கள் அவரை நேசிக்கின்றனர், வியந்து பார்க்கின்றனர், அவர் வழியில் இன்றைய மாணவர்கள் செல்ல வேண்டும்” என்று கூறினார். இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *