பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் , பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இன்று மனு தாக்கல் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பதுடன் திரைப்படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு இன்று ஒரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ் குமார், சைந்தவி நேரில் ஆஜராகி, மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இதன்பின் அவர்கள் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.