பெரம்பலூர் மாவட்டம் மரம் வளர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. வனத்துறையின் மூலம் நடப்பாண்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல் தெரிவித்தார்
பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் இன்று (16.07.2024) வேப்பந்தட்டை வட்டம் செம்மலை பகுதியில் அமைநதுள்ள மத்திய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் நிலையத்தில் துவக்கி வைத்து, நவீன மயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப நாற்றாங்கால்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தை பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையின் மூலம் நடப்பாண்டில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வனக்கோட்டத்தின் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கு 7,59,020 எண்ணிக்கையை பல்வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்திட தயார் நிலையில் உள்ளது. இந்த மரக்கன்றுகள் அனைத்தும் பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிறுவன வளாகங்கள் அரசு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லாக் காலநிலையிலும் மர விதைகள் கிடைப்பதில்லை. எனவே அனைத்து மாதங்களிலும் மரக்கன்றுகள் கிடைக்கும் வகையில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (CUTTING, CRAFTING) விவசாயிகளுக்கும், வனத்திற்கும் தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பயன்படுத்த இந்த உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் மையம் பயன்படுகிறது. 2023 – 24ல் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து உயிர் தொழில்நுட்ப நாற்றங்கால் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செம்மலை நாற்றங்கால் ஆகும். முதலில் தரமான மர கிளைகளில் இருந்து CUTTINGS எடுத்து MIST CHAMBER ல் வைத்து பாதுகாத்து வளர்த்து வந்தால் 25 லிருந்து 40 நாட்களில் நன்கு செடி வளர்ந்து வந்தவுடன் அந்த இளம் பயிரை பாதுகாத்து மூன்று மாதம் ஆனவுடன் வெளிப்புற நர்சரியில் வைத்து வளர்த்து விவசாயிகளுக்கும் வனத்திற்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த உயர் தொழில்நுட்ப நாற்றாங்கால் உற்பத்தி நிலையத்தில் மகோகனி, தேக்கு. செம்மரம், சவுக்கு, வேம்பு, புங்கன், மகிழம், பூவரசு, நீர்மருது மற்றும் கொய்யா உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றது.
இந்த உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் நடவு செய்யும் வகையில் பெரம்பலூர் வனக்கோட்டத்தில் மூலம் 1,41,000 எண்ணிக்கையில் பல்வகை மரக்கன்றுகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள கால நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையை மாற்ற நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற மரக்கன்றுகளை நட்டு வளர்த்து நமது மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொள்ளுங்கள் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வன அலுவலர் திரு.குகனேஷ், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), மாயகிருஷ்ணன் (வேப்பந்தட்டை) மற்றும் வனச்சரகர்கள், வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
