• Fri. Apr 26th, 2024

சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது

Byதரணி

Oct 19, 2022

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் எதிர்க்கட்சித் தலைவா் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் என தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திரபாலாஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் சர்வதிகார போக்கை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிவகாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியம், சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி கழகச் செயலாளர் சரவணகுமார், சிவகாசி மேற்கு பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் சாம் என்ற அபனேஷ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பீலிப்வாசு, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைமை கழக பேச்சாளர் சின்னதம்பி, தொகுதி கணேசன்,திருத்தங்கல் கூட்டுரவு வங்கி தலைவர் ரமணா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் நர்மதா ஜெயக்குமார், சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்ஜிஓ காலனி மாரிமுத்து, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளிசசிகுமார், மகளிரணி பிரியா, காமாட்சி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், சிவகாசி கிழக்கு ஒன்றிய இணைச்செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், சிவகாசி வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கரேஸ்வரன், சிவகாசி நகர இளைஞரணிச் செயலாளர் கார்த்திக், அம்மா பேரவை அழகர்குமார், இளைஞர் பாசறை தங்கப்பாண்டி உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர்களை சிவகாசி கம்மவர் திருமண மண்டபத்தில் போலீசார் வைத்தனர். அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தினால் சிவகாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது-

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது,
எங்களது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள். அதனை அங்கீகரிக்காமல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை ஏற்காமல் ஜனநாயக படுகொலை செய்த திமுக ஆட்சியை கண்டித்து ஜனநாயக வழியில் அறவழியில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வலுக்கட்டயமாக கைது செய்துள்ளனர். அவர்களோடு சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை கண்டித்து விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக சிவகாசியில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் வாயிலாக ஆளும் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏதோ சர்வாதிகார போக்கில், ஆணவப் போக்கில் ஆட்சி இருக்கின்றது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியை நசுக்கி விடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. அண்ணன் எடப்பாடியார் அண்ணா திமுகவின் மூன்றாவது அத்தியாயம். 50 ஆண்டுகள் பூர்த்தியாகி பொன்விழா கொண்டாடி 51 வது ஆண்டு தொடக்க விழாவை நாங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். இது திமுக தலைவருக்கு பொறுக்கவில்லை. திட்டமிட்டு அண்ணா திமுக தொண்டர்களையும் தலைவர்களையும் நசுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் எடப்பாடியாரை கைது செய்துள்ளனர். இதனை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். உடனடியாக எடப்பாடியாரை திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயக பாதைக்கு இந்த அரசு செல்ல வேண்டும். மக்களின் விருப்பப்படி ஆட்சி நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *