• Fri. Apr 26th, 2024

மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : காய்ச்சல்கார அம்மன்

விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது. மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இருக்கும் இடத்திலேயே நேர்ந்து கொண்டால் அந்த நொடியே காய்ச்சல் நோய் காணாமல் போகும். இதை கண்டுணர்ந்த மக்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்காக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவில் குறித்து திருப்பணிகள் மற்றும் வரலாற்றை நன்கு தெரிந்த புலவர் சண்முககனி கூறியதாவது- சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் இருக்கும் இடம் கீரைதோட்டமாக இருந்ததாகவும், இங்கிருந்த ஒரு விளக்கு தூணில் முப்பிடாரி அம்மன் வணங்கப்பட்டு வந்ததாகவும் இதை பழமையான கல்வெட்டுகள் மூலம் இன்றும் காணலாம்.
சிவகாசியில் பத்ரகாளியம்மன், மாரியம்மன் மற்றும் காய்ச்சல்கார அம்மன் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலம், மனபலம், செல்வ செழிப்பு என்று அனைத்தையும் வழங்குவதாக இக்கோவில்கள் இருந்து வருகின்றன. இதுகுறித்து எங்ளுடைய முன்னோர்கள் செவி வழியாக கூறிய செய்திகள் இன்றளவும் சத்தியவாக்காக உள்ளன.
இங்கு வீற்றிருக்கும் இந்த பிரம்மாண்டமான சிலைகளாக உள்ளவர்கள் அண்ணன்- தங்கையாக, 300 ஆண்டுகளுக்கு முன்பாக பிழைப்பு தேடி வந்த இவர்கள் பத்ரகாளியம்மனின் பக்தர்களாக இருந்து தங்களுக்கு கூலியாக கிடைக்கும் காசுகளை ஏழை மக்களுக்கு சோறும், சுண்ட வத்தலும், ரசமும் வழங்கி அம்மனுக்கு செய்யும் சேவையாகவே செய்து வந்துள்ளனர்.
ஆண்டுகள் உருண்டோடின. திடீரென்று ஒரு நாள் இந்த அண்ணன், தங்கைக்கு கடுமையான காய்ச்சல் வந்துள்ளது. நடமாட முடியாத நிலையில் இருந்த இவர்கள் பத்ரகாளியம்மனிடம் தங்கள் நிலைய எடுத்துகூறி மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலைய எண்ணி கண்ணீர் விட்டனர்.
உடனே பத்ரகாளியம்மன் இவர்களின் இருவரின் கனவிலும் வந்து உங்களுடைய மானுட வாழ்க்கை முடிவை நோக்கி வந்து விட்டது. உங்கள் இருவரையும் நானே ஆட்கொள்ளப் போகிறேன் கவலை வேண்டாம் முப்பிடாரி அம்மன் கோவில் வடக்கு திண்ணையில் நீங்கள் இருவரும் படுத்த நிலையில் என்னை வந்து அடைய நான் உங்களை வந்து ஆட்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
பத்ர காளியம்மன் கூறியபடி அண்ணன், தங்கை இருவரும் இப்போது இருக்கும் இந்த கோவிலில் அப்போதைய கீரை தோட்டத்தில் வந்து படுத்தனர். நாம் அன்னையிடம் ஐக்கிய மாவதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யமுடியாத நிலைய நினைத்து கவலை அடைந்தனர்.
மீண்டும் பத்ரகாளியம்மனை வேண்டி எங்களை ஆட்கொள்ளும் நீங்கள் எங்களுக்கு ஒருவரம் தரவேண்டும் என்றனர். பத்ரகாளியம்மனிடம் தீராத காய்ச்சல் நோயினால் அவதிப்படும் மக்கள் எங்களை நினைத்து வேண்டி கொண்டால் அவர்களின் நோய் குணமடைய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.
பத்ரகாளியம்மனும் இவர்களின் இருவரின் வரத்தை ஏற்று அவ்வாறே ஆகட்டும். எங்கிருந்து நினைத்தாலும் அந்த நொடியே அவர்களின் நோய் குணமாகும் வரத்தை உங்களுக்கு வழங்குகிறேன். நீங்கள் மக்களுக்காக கேட்ட இந்த வரம் மக்களுக்கானது, நோய் குணமான மக்கள் உங்களை இங்குவந்து வணங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று கூறி அண்ணன், தங்கை இருவரையும் ஆட் கொண்டார்.
அவர்களின் நினைவாக அண்ணன், தங்கை இருவரையும் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து அவர்கள் உருவத்தை மண்னால் செய்து வணங்கி வரும் பழக்கம் உருவானது. சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக காய்ச்சல்கார அம்மனை வணங்கும் பழக்கம் வருகிறது என்றார். நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி, மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
தேவஸ்தான நிர்வாக தலைவர் குமரவேல் கூறும் போது இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல் கைஎடுத்து வணங்கும் மக்கள் அனைவருக்கும் கேட்ட வரம் அருளும் அன்னையாகவே வணங்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல்கார அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் என்றார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *