குடியிருப்பு பகுதியில் நுழைந்த புலி துப்பாக்கி மூலம் மயக்க ஊசியால் சுட்ட போது உயிரிழந்தது.
தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாறு அர்னக்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளி அருகே வண்டிப்பெரியாறு அர்னக்கல் குடியிருப்பு பகுதியில் நுழைந்த புலி ஒன்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதை அடுத்து வனத்துறையினர்
கடந்த சில நாட்களுக்கு முன் டிரோன் மூலம் நடத்திய கண்காணிப்பில் புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

இதனால் கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறை சில நாட்களாக முயற்சி செய்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் டிரோன் கண்காணிப்பில் இருந்த புலி மறைந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் அரணக்கல் பகுதியில் புலி கன்று குட்டி மற்றும் நாய்களை கொன்றது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருந்து திடீரென புலி நடத்திய தாக்குதல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. புலி வளர்ப்பு பிராணிகளை கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது பொதுமக்களிடையே பதற்றத்தையம் ஏற்படுத்தியது.
இதனால் வனத்துறை மீண்டும் புலியின் நடமாட்டத்தை டிரோன் மூலம் கண்காணித்தபோது, இன்று காலை கிரம்பி எஸ்டேட்டில் 16-ஆம் டிவிஷனில் உள்ள சிறிய தேயிலை காட்டினுள் புலி பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி வலையில் சிக்க வைக்க வனத்துறை முடிவு செய்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் என்.அனுராஜ் தலைமையில் புலிக்கு துப்பாக்கி மூலம் மயக்கு ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்துவது மிகவும் சவாலானதாக இருந்தது. புலி தேயிலை காடுகளில் மறைந்திருந்ததால் தொலைவில் இருந்து சுட முடியவில்லை. 15 மீட்டர் அருகில் சென்று உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக புலி மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

முதல் மயக்க ஊசி புலி மீது படவில்லை என்பது தெரியவந்ததும், இரண்டாவது முறையாக சுட்டனர். அப்போது புலி டாக்டர் அனுராஜை தாக்க முயன்றபோது மனு என்ற வனத்துறை வாட்சர் தடுக்க முயன்றார். புலியின் தாக்கியதில் மனுவின் கேடயமும் ஹெல்மெட்டும் உடைந்தது. தொடர்ந்து மனுவை தாக்க முயன்ற புலி மீண்டும் சுடப்பட்டது. மயக்க ஊசி துப்பாக்கி சூட்டில் வீழ்ந்த புலி தேக்கடி வனவிலங்கு சரணாலய மருத்துவர் மனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தது. புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றவே புலி மூன்றாம் முறையும் சுடப்பட்டதாக கோட்டயம் மாவட்ட வன அலுவலர் என். ராஜேஷ் தெரிவித்தார்.

இதை அடுத்து தேக்கடிக்கு கொண்டு வரப்பட்ட புலியின் உடல், என்டிசிஏ (தேசிய புலிகள் ஆணைய காப்பக) வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனைக்கு பிறகு புதைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.