அர்ச்சகர்களின் தட்டு காணிக்கை உண்டியலில் போடும் உத்தரவு அறிக்கை ரத்து
நமது அரசியல் டுடே இணையதளத்தில், ‘அதிர்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள்…ஜகா வாங்கிய அமைச்சர் சேகர் பாபு’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இந்தச் செய்தியைப் படித்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்படி உத்தரவை ரத்து செய்த நிகழ்வு அனைவராலும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
மதுரை தண்டாயுதபாணி கோவிலில் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் உள்ளது. தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற கோவில் செயல் அலுவலரின் தன்னிச்சையான உத்தரவு என இந்து அறிநிலையத்துறை விளக்கம் அளித்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விளக்கம் கேட்டு, இதை நேற்று முதல் முதலாக நமது அரசியல் டுடே இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டது.
இந்தச் செய்தி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்குச் சென்ற 12 மணி நேரத்துக்குள்ளாகவே மேற்படி கோவிலில் தட்டு காணிக்கைகள் திருக்கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கத்தை ரத்து செய்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அதில் மதுரை மாநகர் நேதாஜிசாலை, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சட்டப்பிரிவு 46(iii)-60 கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். மேற்படி திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது.
இருந்தபோதிலும் திருக்கோயில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக 07.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவு மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை திருக்கோயில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
நமது அரசியல் டுடே இணையதள செய்தியின் எதிரொலியாக, அர்ச்சகர்களின் பிரச்னைகளுக்கு 12 மணி நேரத்துக்குள்ளாகவே தீர்வு கண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.









