

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், சென்னை வரும் விமானங்கள் பெங்களுருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை, வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி துபை, தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. அதேவேளையில் கனமழையால் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.