இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ படம் எடுக்கப்பட்டுள்ளது.
விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் அடுத்த முதனை பகுதியைச் சேர்ந்த ராஜாக்கண்ணு, காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலை மட்டுமல்லாமல் பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையின் அதிகார பசிக்கு இறையாவதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது.

ஓடிடி-யில் வெளியான ‘ஜெய் பீம்’ படம் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக்கிறது. கணவரின் நீதிக்காக கடைசிவரை போராடிய ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார். படத்திற்கு பிறகு அவரது நிலையும் தற்போது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பார்வதியின் நிலைக்குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் லாரன்ஸ், அவருக்கு வீடுகட்டித் தருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் வாழ்க்கை நிலைக்குறித்துக் கேள்விப்பட்டு துயருற்றேன். அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.