ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் ஆனி ஸ்வாதி திருவிழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூன் 21 ஸ்ரீவில்லிபுத்தூர் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும்.
இங்கு ஆழ்வார்களில் முதன்மையான விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார் மற்றும் அவர் கண்டெடுத்த திருமகளான ஆண்டாளும் தோன்றிய பெருமையுடைய ஊராகும்.இங்கு கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் சிறு வயது முதல் பரமன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு நந்தவனம் அமைத்து தினமும் மாலை கைங்கரியம் செய்து வந்தார். தொடர்ந்து பெருமாளின் ஆணைப்படி மதுரை சென்று பாண்டிய மன்னனின் அரசவையில் நாராயணனே பரம்பொருள் என்று பரதத்துவ நிர்ணயம் செய்தார்.

இதனை மெச்சிய பாண்டிய மன்னனும் பெரியாழ்வாரை சிறப்பித்து தனது பட்டத்தின் யானை மேல் அவரை ஏற்றி வீதி உலா வரும்பொழுது பெரியாழ்வார் யானையின் கழுத்தில் கட்டி இருந்த மணிகளை கொண்டு தாளமாக தட்டி திருப்பல்லாண்டு பாடினார். இதனை ஏற்றுக் கொண்ட பகவான் ஸ்ரீதேவி பூதேவி சமேயதராய் காட்சியளித்தார். பின்னர் பாண்டிய மன்னனின் அரசவையில் பரிசாக கிடைத்த பொற்கிழிகளை கொண்டு பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இங்கு கோவில் கொண்டுள்ள வட பத்திர சயனருக்கு அரிய பல திருப்பணிகளை செய்து ராஜகோபுரம் கட்டி சிறப்பித்தார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெரியாழ்வாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதம் பெரிய ஆழ்வார் ஆனி சுவாதி திருவிழா சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கடக லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து பெரியாழ்வார் பல்வேறு வாகனங்களில் சன்னதியில் இருந்து புறப்பாடாகி வீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து 4ந் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வார் கோரதம் எனும் செப்பு தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.
5 தேதி பெரியாழ்வார் வாழைக்குள தெரு தீர்த்தவாரி மண்டபம் சென்று தீர்த்த வாரியம் மங்களாசாசனமும் நடைபெறுகிறது. பெரியாழ்வார் ஆனிசுவாதி திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் வெங்கட் ராமராஜா அறங்காவலர்கள் வே. ராம்குமார் வரதராஜன் அ.உமாராணி த.நளாயினி தாயில்பட்டி வெ.மனோகரன் வெங்கடசாமி மற்றும் மதுரை அறநிலை துறை இணை ஆணையர் செ. மாரியப்பன் விருதுநகர் உதவியாளர் மு. நாகராஜன் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் கோயில் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.