கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான குமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில், எம்.எல்.ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், முன்னாள் துணைத்தலைவர் பா.தம்பித்தங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் சொ.முத்துக்குமார், பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு பக்தி பஜனை, இரவு 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றது.
விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

9ஆம் நாள் திருவிழாவான ஜூன் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். 10 ஆம் நாள் திருவிழாவான 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு ஆகியவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.