திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக தீ விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் – திருச்சி சாலையில் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நான்கு தளங்கள் உள்ளன. ஐ சி யு உட்பட நூறு படுக்கைக்கு மேல் கொண்ட மருத்துவமனையாகும்.

இந்நிலையில் இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று இரவு தரைத்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தரைத்தளம் முழுவதும் பரவியது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் நான்கு தளங்களுக்கும் பரவியது. பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை அதற்குள் தரைத்தளம் முழுவதும் தீ மளமளவென பரவியது.
உள்ள நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு புகை மூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அனைவரும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் அதற்குள் நான்கு தளங்களுக்கும் புகை பரவியது. நோயாளிகள் மற்றும் நோயாளியுடன் வருகை தந்த உறவினர்கள் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வரும் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக திண்டுக்கல் நகரில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தின் போது லிப்டில் வந்த மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை லிப்டில் மாட்டிக் கொண்டனர் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தீயணைப்பு உடைத்து அனைவரது உடலையும் மீட்டனர்.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு 23 பேர் அரசு 3 பேர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உடனடியாக உள் நோயாளிகளை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி அனைவரும் வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
தகவல் அறிந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதேபோல் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சம்பவ இடத்தை பார்வையிட்டு நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.