விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேபெரியார் நகரை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான அருண் விண் எனும் தீப்பெட்டி தொழிற்சாலை சாத்தூரை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் தயார் செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தீக்குச்சி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாக தெரிய வருகிறது அப்போது திடீரென மின்சாரம்உராய்வின் காரணமாக தீக்குச்சி தயாரிக்கும் மிஷினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் தொழிற்சாலை விட்டு வெளியேறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து தீ மள மளவென பற்றி ஒரே புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரம் முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது. அதிகாலை நேரம் என்பதால் பணியாளர்கள் அதிக அளவில் இல்லை என்பதாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.