• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திரையுலகம் அதிர்ச்சி… பிரபல பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

ByP.Kavitha Kumar

Jan 10, 2025

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்ட பி.ஜெயச்சந்திரன் கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார்.

தமிழில் இவர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. ‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் நேற்று பிரிந்தது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுமார் 60 ஆண்டுகளாக திரையிசையில் ஒலித்த இவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை.