புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா 10.3 .2026 முதல் 14.3.2026 வரை சிறப்பாக நடைபெறுகிறது.

நிகழ்வின் ஓர் அங்கமாக முத்தமிழ் விழாவும் அடுத்து விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு விழா, இறுதியாக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஐம்பெரும் விழாவின் முதல் நாளில் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆய்வுத் துறை தலைவர் முனைவர் மா. சாந்தி அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் கி. நிர்மலா தலைமை உரையாற்றுகையில் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், கலைகள், முதலானவற்றை காப்பாற்றவும், வளர்க்கவும் இது போன்ற தமிழ் சார்ந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் முதலில் தமிழில் பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் முத்தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்வாக நகைச்சுவை சிந்தனைப் பட்டிமன்றம் இன்றைய இளைஞர்களின் செயல்பாடு வாழ்த்தும்படி உள்ளதா வருந்தும்படி உள்ளதா என்ற தலைப்பில் நடைபெற்றது. நடுவராக காப்பிய கவிஞர் முனைவர் பாகை இரா. கண்ணதாசன் நடுவர் பொறுப்பேற்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு வாழ்த்தும்படி உள்ளது என்ற தலைப்பில் ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் மு பாலசுப்பிரமணியன் அவர்களும் வருந்தும்படி உள்ளது என்ற அணிக்கு கவிஞர் அறிவுச்செல்வி அவர்களும் தலைமை ஏற்று விவாதம் நடத்தினார்கள்.இதில் கவிஞர் டோக்கியோ ராமநாதன் மற்றும் கவிஞர் லட்சுமி நாராயணன் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் தரப்பு விவாதங்களை எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக நடுவரின் தீர்ப்பில் இளைஞர்கள் பயன் படாதவர்கள் அல்ல பயன்படுத்தப் படாமல் இருக்கிறார்கள்,இளைஞர் சக்தியை நாம் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும் இளைஞர்களின் அறிவும் திறமையும் வாழ்த்தும்படி உள்ளது என்று தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். விழாவின் அடுத்த நிகழ்வாக கல்லூரி மாணவிகளின் இசை நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக தமிழ் துறை இணை பேராசிரியர் முனைவர் கா. யோகாம்பாள் அவர்கள் நன்றியுரை வழங்க முத்தமிழ் விழா இனிதே நடைபெற்று முடிந்தது.



