விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். எனினும் சித்திரை, ஆடி,தை, பங்குனி ஆகிய மாதங்கள் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும்.

இம்மாதங்களில் அம்மனுக்கு சிறப்பு விழாக்கள் எடுக்கப்படுவதால் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சங்கரன்கோவில் புளியங்குடி சுரண்டை கடையநல்லூர் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் குடும்பம் குடும்பமாகவும் சில பகுதிகளில் மொத்த கிராம மக்களும் பாதயாத்திரையாக அம்மனை தரிசனம் செய்ய வருவர். இவ்விழா காலங்களில் சாத்தூரிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆடிப்பெரும் திருவிழாவான கடைசி வெள்ளி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுவதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்பட்டி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி,திருநெல்வேலி தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் இடைவிடாது இரவு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களும் கார் வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை மாவிளக்கு, தொட்டில் குழந்தை, உருண்டு கும்பிடுதல், அழகு குத்துதல், முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்திய வண்ணம் உள்ளனர்